விஜய் ஒருவார்த்தை பேசினாலும் நறுக்கென்று இருக்கும்: நடிகை மீனா

விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட நடிகை மீனா முதல் ஆளாக மேடையில் பேச அழைக்கப்பட்டார். அவர் தனது மகள் நானிகாவுடன் மேடையேறினார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய மகளை ‘தெறி’ படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தபோது முதலில் நான் மறுத்தேன். ஆனால், அட்லி இந்த கதாபாத்திரத்திற்கு என்னுடைய மகள் பொருத்தமாக இருப்பாள் என்பதில் உறுதியாக இருந்தார்.

என்னுடைய 4 வயது குழந்தை இவ்வளவு சீக்கிரமாக சினிமாவில் நுழையவிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும், நல்ல கதை, என்னுடைய மகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் எல்லாம் சரியாக அமைந்தததால் இதில் நடிக்க வைக்க சம்மதித்தேன் என்று கூறினார்.

மேலும், அவர் விஜய்யை பற்றி கூறும்போது, விஜய் மிகவும் அமைதியான நபர். அதிகம் பேசமாட்டார். அப்படியே அவர் ஒரு வார்த்தை பேசினாலும் அது நறுக்கென்று இருக்கும். மேலும், அவருடைய நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை உணர்வும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். பின்னர் மீனாவின் மகள் நானிகா பேசும்போது, விஜய் அங்கிள்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று மழலை கொஞ்சும் மொழியில் பேசும்போது விழா அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.