ரசிகர்களின் ஆரவாரத்துடன் தெறி ஆடியோ வெளியீட்டு விழா தொடங்கியது

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் சரியாக மாலை 6 மணியளவில் தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முதல் ஆளாக நிகழ்ச்சி நடைபெறும் சத்யம் திரையரங்குக்கு வருகை தந்து அனைவரையும் வரவேற்றார்.

அவரைத் தொடர்ந்து படத்தின் காஸ்டியூம் டிசைனர் சத்யா, எடிட்டர் ஆண்டனி எல்.ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், தயாரிப்பாளர் தனஞ்செயன், அபிராமி ராமநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பத்துடன் வருகை தந்தார். பின்னர், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை மீனா மற்றும் அவரது மகள் நானிகா ஆகியோரும் வருகை தந்தனர்.

கடைசியாக விஜய் விழா நடைபெறும் அரங்கினுள் நுழைந்தபோது, விழா அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. விஜய் பிரவுன் கலர் சட்டையுடன் மிகவும் இளமையாக காட்சி தந்தார்.பின்னர், ‘தெறி’ படத்தின் டீசரும், பாடல்களும் திரையில் திரையிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து மீனாவும், அவரது மகளும் நானிகாவும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விஜய் பற்றியும், தெறி படத்தை பற்றியும் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து ஆடியோ வெளியீடு விழா ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்று வருகிறது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியம் தொகுத்து வழங்கி வருகிறார்.