கடற்படையினரால் 7 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்! இரு இந்திய மீனவர்களும் கைது

யாழ்.குடாநாட்டுக்குள் கடத்தப்படுவதற்காக இந்திய மீனவர்களால் கொண்டு வரப்பட்டிருந்த 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் இந்திய மீனவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இன்று காலை இந்தியாவில் இருந்து படகொன்றின் மூலம் சுமார் ஏழு கிலோ கேரள கஞ்சாவினை பருத்தித்துறை கடலினுடாக கடத்தி வந்துள்ளனர்.

இதன் போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவர்களை கைது செய்து விசாரனை மேற்கொண்டதில் இவர்கள் கஞ்சாவினை கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்களிடமிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பின்னர் கடற்படையினர் அவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் இருவரையும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.