தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் முதல் இடம் பிடித்த அஜித்

தென் இந்தியாவில் ரசிகர்களிடம் அதிக ஆதரவு பெற்ற நடிகர் யார்? என்ற கருத்துக் கணிப்பை, பிரபல ஆங்கில தொலைக்காட்சி நடத்தியது.

கடந்த ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையில் தென் இந்தியாவில் செல்வாக்கு பெற்ற நடிகர் யார் என்பது குறித்து ரசிகர்களிடம் நடந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ‘‘என்னை அறிந்தால்’’ படத்திற்காக அஜித் தென் இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 46.88 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன.

2–வது இடத்தை ‘பத்தேமறி’ படத்தில் நடித்த மம்முட்டி பெற்றுள்ளார். இவருக்கு 42.58 சதவீத ஓட்டுக்களை ரசிகர்கள் வழங்கி உள்ளனர்.

3–வது இடத்தை ‘பாகுபலி’ படத்துக்காக பிரபாஸ் பெற்றிருக்கிறார். இவருக்கு கிடைத்திருக்கும் ஓட்டு 4.01 சதவீதம். ‘என்னுநிண்டே மொய்தீன்’ படத்தின் மூலம் பிரிதிவிராஜ் பெற்றுள்ள இடம் 4. இவருக்கு 2.27 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

இவர்கள் தவிர ‘ஐ’ படத்துக்காக விக்ரமுக்கு 5–வது இடத்தையும், கமலுக்கு ‘பாபநாசம்’ படத்துக்காக 6–வது இடத்தையும் தென்இந்திய ரசிகர்கள் வழங்கி உள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் அஜித்துக்கு முதல் இடம் கிடைத்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.