தேர்தலில் நடிகர்கள் ஆதரவு யாருக்கு?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஆதரவு யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் 16-ந்தேதி தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு மற்றும் பிரசார பணிகளில் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டி இறங்கி உள்ளன.

சினிமா தரப்பினரையும் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு இருக்கிறது.

நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள். ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், குண்டுகல்யாணம், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

நடிகைகள் குஷ்பு, நக்மா இருவரும் காங்கிரசுக்கு ஓட்டு சேகரிக்கிறார்கள்.

எஸ்.வி.சேகர், விசு, விஜயகுமார், கஸ்தூரிராஜா, பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்கிறார்கள்.

ரசிகர்கள் பலம் உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்கள் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர்கள் ஆதரவை பெற அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரஜினிகாந்த் ஆதரவை பெறுவதற்கு பா.ஜனதா கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம் என்று அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்புக்காக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். பத்மவிபூஷன் விருது பெறுவதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அத்வானியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது ரஜினியிடம் நரேந்திரமோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் அந்த கட்சிக்கு வேலை செய்ய ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ரஜினியின் ஆதரவு கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுக்கு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1996 தேர்தலில் தி.மு.க, த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்றது. 1998 பாராளுமன்ற இடைதேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். 1999 பாராளுமன்ற தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் தனது ரசிகர்களுக்கும் பா.ம.க.வினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அ.தி.மு.க.வை ஆதரித்தார். 2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை.

தற்போது எல்லா கட்சி தலைவர்களுடனும் நட்புறவோடு இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி சென்னை வந்து ரஜினியை சந்தித்தபோது கூட வெளிப்படையாக அந்த கட்சியை ஆதரிக்கவில்லை. எனவே இந்த தேர்தலில் அவரது ஆதரவு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தற்போது சினிமாவில்தான் ரஜினியின் முழு கவனமும் இருக்கிறது. ஒரே நேரத்தில் கபாலி, 2.0 ஆகிய இரண்டு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் தேர்தலில் ஓட்டுப்போடுவது மட்டுமே எனது அரசியல் பணியாக இருக்கும் என்றும் கூறி விட்டார். எனவே ரசிகர்கள் அந்தந்த தொகுதிகளில் பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட முடிவு செய்துள்ளனர்.

விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சமூக சேவை பணிகளில் ஈடுபடுகிறார். அவர் அரசியலில் ஈடுபடலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நரேந்திரமோடியை விஜய் சந்தித்தார். இதன்மூலம் பா.ஜனதாவுக்கு மறைமுகமாக விஜய் ஆதரவு கிடைத்ததாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்க கூடாது என்று ரசிகர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவரது ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்கு அந்தந்த தொகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

அஜித்குமார் இது வரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது இல்லை. 2011 தேர்தலில் இவரது ரசிகர்கள் அஜித் படத்துடன் சென்று அரசியல் கட்சியினருக்கு ஓட்டு கேட்டனர். இதைதொடர்ந்து ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் ஆதரவை பெறுவதற்கும் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர்.