நடிகர் கலாபவன் மணி பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் பற்பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

அவரது உடல் உள்ளுறுப்புகள் கொச்சியில் உள்ள மண்டல ரசாயன பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் அவரது உடலில் ’குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

கலாபவன் மணியின் மரணத்தில் அவரது நண்பர்கள், உதவியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அவரது மனைவி நிம்மி, சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ராமகிருஷ்ணன், தனது சகோதரர் கலாபவன் மணிக்கு அவரது நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்று கருதி சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாலக்குடி பண்ணை வீட்டில் கலாபவன் மணியுடன் இருந்தவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் சாலக்குடியில் உள்ள கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து முக்கிய ஆதாரம் என கருதப்படுகிற சில ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த ரசாயனங்கள், ஏற்கனவே கலாபவன் மணி உடலில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ள ‘குளோர்பைரிபோஸ்’தானா என்பதை உறுதி செய்வதற்காக ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் சொல்கின்றன.

போலீஸ் காவலில் உள்ள கலாபவன் மணியின் உதவியாளர்கள் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் எந்த ஒரு கூடுதல் தகவலையும் கூற மறுப்பதாக தெரியவந்துள்ளது.இதற்கிடையே கலாபவன் மணி குடும்பத்தினர் விரும்பினால், அவரது மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசு தயாராக இருக்கிறது என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.