மாணவன் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் 17 வயதுச்சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களையும்,  எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன், வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

மேற்படி மாணவர்களின் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்குவதற்காக நீதிமன்றத்துக்கு நேற்ற ஆஜரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், இரண்டு மாணவர்கள் தொடர்பான நன்னடத்தைச் சான்றிதழையும் நீதிமன்றத்துக்கு வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் இன்னமும் கைது செய்யப்படவில்லையெனவும் விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

தட்டாதெருச் சந்தி ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் 13ஆம் திகதி மாலை பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் சென்ற 15 பேர் கொண்ட கும்பலொன்று சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது.

இதில் அதேயிடத்தைச் சேர்ந்த கே.கேமராஜன் (வயது 17) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.