யாழ்ப்பாண வரலாற்றில் பதிவாகியது அதி கூடிய பெறுமதியான கொள்ளை

யாழ்ப்பாணம் - றக்கா வீதியில் உள்ள நிதி நிறுவனத்தின் இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பைக் கொண்டு திறந்த திருடர்கள் 10.7 மில்லியன் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம்,  ஞாயிற்றுக்கிழமை (03) இரவு 11 மணிக்கும் நேற்று (04) அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றில் இவ்வாறு பாரிய தொகை பணம் திருடப்பட்ட சம்பவம் இதுவே முதல் தடவையென, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிதி நிறுவனத்தின்  பின் பக்க கதவை உடைத்த திருடர்கள், அங்கிருந்த சி.சி.ரி.வி கமெராவின் தொடர்புகளை முதலில் துண்டித்துள்ளனர். பின்னர், வங்கியில் இருந்த இரும்பு பெட்டகத்தின் சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த பணத்தைச் திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.