கிளிநொச்சி, கனகபுரம் வீதியோர வியாபாரிகளுக்கான இறுதி அறிவித்தல்

கிளிநொச்சி, கனகபுரம் பிரதேசத்தின் வீதிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 87 வர்த்தகர்களுக்கு கரைச்சி பிரதேச சபை இறுதி அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் வீதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 87 வர்த்தகர்களுக்கு எதிராகவே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்கள், இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இடத்தை விட்டுச்செல்ல வேண்டும் என கரைச்சி பிரதேச சபையினால் இறுதி அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குறித்த வீதியானது முப்பது மீற்றர் அகலமுடையது எனவும், இரண்டு பக்கங்களிலும் உள்ள வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை வீதியின் மத்தியிலிருந்து சுமார் 50 அடிக்கு அப்பால் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் பெரும்பாலான வியாபாரிகள் வீதிக்கு மிக மிக அருகில் தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வீதிக்கு அருகே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும், பொது மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாடானது, எதிர்கால நகரின் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடையாக உள்ளது என பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே கரைச்சி பிரதேச சபையின் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் வீதிக்குரிய பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் அதனை அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.