வடக்கில் இயற்கை அனா்த்தம்? தயாா் நிலையில் அதிகாரிகள்

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மழையுடனான காலநிலை நிலவி வரும் சந்தர்ப்பத்தில் வடக்கில் திடீர் வானிலை மாற்றம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

இதனால், அனைத்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் படையினர் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வடக்கு, வடமேல், மேல், தென் ஆகிய மாகாணங்களில் கடும் காற்று வீசுவதுடன், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.

மேலும், யாழ். மாவட்ட கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகுமானால், வெள்ள அனர்த்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.