பொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக பிரதமர்! ஐ.தே.க. பொதுக்கூட்டத்தில் சுவாரசியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக நின்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்வுகளை பார்வையிட்டுள்ள சுவாரசியமான நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேசிய இளைஞர் முன்னணி மற்றும் ஐ.தே.க.வின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் இணைந்து இன்று கொழும்பில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிகள் பரப்பி வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

புதிய இலங்கையை அமைக்க வழிவிடு எனும் கருப்பொருளில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களோடு மக்களாக நின்று நிகழ்வுகளை அவதானித்தபடி, கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளுக்கு செவிமடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.