சற்று முன் யாழில் பெற்றோர் முன்னிலையில் இளைஞனை அடித்து இழுத்துச் சென்றது பொலிஸ்

மானிப்பாய் பொலிசாரால் இளைஞன் ஒருவன் சற்று நேரத்துக்கு முன்பு பெற்றோருக்கு முன்பாக வைத்து கடுமையாக தாக்கப்பட்டு பொலிஸ் வாகனத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளான்.



இன்று (12.10.17) மாலை 6.15 மணியளவில் மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றுக்கு வாகனத்தில் சென்ற பொலிசார் அங்கிருந்த இளைஞன் ஒருவனை பெற்றோர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கியதுடன் அதனை தடுக்க முற்பட்ட அவரது தாயாரையும் ஒரு பொலிஸ்காரர்  தாக்க முற்பட்டுள்ளார். எனினும் அவ் வீட்டில் பாதுகாப்பு கமரா பூட்டப்பட்டிருந்ததை அவதானித்த மற்ற பொலிஸ்காரர் அதனை தடுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பொலிசார்  தடுத்து வைத்துள்ளனர். அவ் இளைஞனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே அழுதவாறு நின்றிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த இளைஞன் ஒரு ஆஸ்த்துமா நோயாளி எனவும் தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் எழுந்தமானமான செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.