'ஹலோ மேடம் நீங்கள் கொம்மினிகேசனில் ......?' யாழ்ப்பாணத்து மேடம் ஒருவரின் கதை இது!!

கிட்டத்தட்ட 20 வருசங்கள் இருக்கும். அந்த நேரம் ஆமி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொண்டிந்தது. ஆமியின் துணையிருந்தால் யாரும் எதுவும் செய்யலாம் என்ற நிலை அப்போதிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதென்றாலும் ஆமியின் சிநேகிதம் இருந்தால் உடனடியாக கப்பல் ரிக்கட் அல்லது விமான ரிக்கட் கிடைத்துவிடும்.

அந் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஆமியின் செல்வாக்குடன் தொலைபேசி இணைப்புக்கள் எடுத்து பலர் இலட்சக்கணக்கில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். கொம்மினிக்கேசன்கள் வைத்திருப்பவர்களை அரச உயரதிகாரிகள் கணக்கில் மக்கள் பார்த்தார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுடன் கதைப்பதற்காக மக்கள் கொம்மினிக்கேசன்களுக்கு படை எடுத்த காலம் அது. பலகாலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து  வெளிநாட்டு உறவுகளின் கடிதத்தை மாத்திரம் பார்த்த மக்களுக்கு வெளிநாட்டு உறவுகளின் பேச்சை காதால் கேட்பதற்கு அளவற்ற ஆர்வம் இருந்தது உண்மைதான்.

ஆமி யாழ்ப்பாணத்தைப் பிடித்த பின்னர் முதல் முதல் 1996ம் ஆண்டு இறுதிப் பகுதியில் இரு இடங்களில் மட்டும் தொலைபேசி இணைப்புப் பொருத்தப்பட்டு மக்கள் கதைப்பதற்காக தொலைபேசி வசதி வழங்கப்பட்டது. ஒன்று வேம்படிச் சந்தியில் இருந்த ரெலிக்கொம் அலுவலகமாகும். இன்னொன்று தனியார் ஒருவருக்குரியது. ஸ்ரான்லி வீதியில் இருந்த குமரன் ரூரிஸ் இன் எனும் ஒரு விடுதிக்கே கொடுக்கப்பட்டது. அந்த விடுதி முதலாளி ஒரு ஓய்வு பெற்ற போஸ்மாஸ்ரர். பெயர் திருநாவுக்கரசு.

இந்த இரு இடங்களுக்கும் வெளிநாட்டு உறவுகளுடன் கதைப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்தனர். ரெலிக்கொம் அலுவலகத்தில் மாலை 4 மணியுடன் மக்கள் கதைப்பதற்கான நேரம் முடிவடைந்துவிடும். ஆனால் குமரன் விடுதியில் இரவு தங்கியிருந்தும் கதைக்கலாம். அவ்வாறு தங்கியிருப்பவர்கள் அடையாள அட்டைகளைப் பதிவு செய்து இராணுவத்திடம் வழங்கி விட்டே தங்கியிருந்து தொலைபேசி கதைக்கலாம். ஒருவருக்கு 3 நிமிடங்கள் மாத்திரமே கதைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.  அந்த விடுதியில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு நுாறு ரூபா கட்டணம் செலுத்தியே தமது வெளிநாட்டு உறவுகளுடன் மக்கள் கதைத்து மகிழ்ந்தார்கள். நுாறு ரூபா என்பது ஒரு நாள் அரச உத்தியோகத்தரின் சம்பளத்திலும் அதிகமாகும். அந் நேரம் அரச உத்தியோகத்தரின் சம்பளம் மாதம் 2500 ரூபா.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல தனி நபர்கள் ஆமியின் செல்வாக்கில் தொலைபேசி இணைப்புக்களைப் பெற்று பெருமளவு பணம் சம்பாதித்தார்கள். கொம்மினிக்கேசன் வைத்திருப்பவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்களாக முற்பட்ட நேரம் அந் நேரம்தான். யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நெருக்கடிகளை வைத்து தவித்த முயல் அடித்து கோடீஸ்வரர்கள் ஆனார்கள் பலர்.

காலம் செல்லச் செல்ல யாழ்ப்பாணத்தில் ஏராளமான கொம்மினிக்கேசன்கள் புற்றீசல்கள் போல் முளைத்தன. யாழ்ப்பாணத்தான்களுக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. யார் என்ன தொழில் செய்து முன்னேறுகின்றார்களோ அதே தொழிலை தாங்களும் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஒருவன் கடை வைத்திருக்கின்றான். நல்ல உழைக்கின்றான் என அறிந்தால் அவனது கடைக்குப் பக்கதிலேயே தானும் கடையைப் போட்டுவிட்டுவான். போட்டிக்கு வியாபாரம் தொடங்கி அவனையும் நாசமாக்கி தன்னையும் நாசமாக்கி விடுவான்.

கொம்மினிக்கேசன்கள் பலவும் இவ்வாறே தொடங்கின. தொழில் போட்டி காரனமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல கொம்மினிக்கேசன்களில் அந் நேரத்தில் அழகான இளம் யுவதிகள் வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். அவ்வாறான யுவதிகளை சயிட் அடிப்பதற்கென்றே பலர் குறித்த கொம்மினிக்கேசன்களுக்கு செல்வதுமுண்டு. சில கலியாணம் கட்டினவர்கள் கூட இவ்வாறான யுவதிகளைப் பார்த்து வழிவதற்காக அங்கு செல்வார்கள்.

இவ்வாறு கொம்மினிக்கேசனில் இருக்கும் யுவதிகள் பலருக்கு பல இடங்களிலும் ஏராளமான தொடர்புகள் இருக்கும். ஒரு தடவை நல்லுார்ப் பகுதியில் செயற்பட்டு வந்த கொம்மினிக்கேசனில் வேலை செய்த யுவதி ஒருவர் தனது தமையனை தாக்கிய குடும்பஸ்தர் ஒருவரை ஆமியை விட்டு நையப்புடைத்த சம்பவம் நடந்திருந்தது.

காலம் செல்லச் செல்ல கைத் தொலைபேசிப் பாவணை அதிகரிக்க கொம்மினிக்கேசனின் செல்வாக்கு குறைந்து விட்டது. அதன் பின்னர் கொம்மினிக்கேசனின் எந்த வடிவான பிள்ளை நின்றாலும் செல்வதற்கு ஆக்கள் இல்லை. அதனால் கொம்மினிக்கேசனில் நிற்கும் பிள்ளைகளின் சம்பளமும் குறைந்துவிட்டது.

தற்போது கொம்மினிக்கேசனில் வேலை செய்கின்றேன் என யாராவது ஒரு பெண் கூறினால் அவளை வேடிக்கையாக பார்க்கும் காலம் வந்துவிட்டது.

ஆனால் கொம்மினிக்கேசனில் வேலை செய்யும் பெண்களை இளக்காரமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அப் பெண்கள் சில வேலை உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒருவராகவும் மாறலாம்

 ஒரு அரச உயரதிகாரியை அதட்டி அடக்கும் அதிகாரம் மிக்க பெண்ணாகவும் கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண் மாறலாம். எந்தவித கல்வித் தகுதியும் இல்லாது கொம்மினிக்கேசனில் வேலை செய்த தகுதியை வைத்தே நன்றாக கல்வி கற்ற படித்தவர்களை தனது காலுக்குக் கீழ் கொண்டு வந்து நிறுத்த வைக்கலாம். பல்கலைக்கழகத்தில் உச்சப்படிப்பு படித்தவர்கள் தமது சான்றிதழ்களுக்கு வேலை தாருங்கள் என கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண்ணை கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு வரலாம். தனக்கு கீழ் வேலை செய்பவர்களை இளக்காரமாகப் பார்க்கும் அதிகாரிகள் கூட கொம்மினிக்கேசனில் வேலை செய்த பெண்ணுக்கு அடங்கி நடக்கும் நிலை வரலாம்.

இவ்வாறான கொம்மினிக்கேசனில் வேலை செய்த ஒரு பெண்ணே தற்போது அதிகாரத்தரப்புடன் இணைந்து ஒரு அரசியல்வாதியாக பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். குறித்த பெண் யார் என சொல்பவர்களுக்கு சிறப்புப் பரிசில்களை வழங்கத் தயாராக உள்ளேன்.......

நன்றி

முகப்புத்தகம்