அரசியல் கைதிகளின் விடுதலை : நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த வழிபாட்டை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.தமது வழங்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டாம்,

மரணதண்டனைக் கைதிகளுடன் தம்மை தடுத்து வைக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 ஆம் திகதி தமது குறித்த கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையில், மூன்று கைதிகளின் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையிலே தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு உடனடி தீர்வினை கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சிறிய தொகையிலான மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி போராட்டங்களை கைவிட்டு ஏமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.