காதல் படப் பாணியில் காதலர்களைப் பிரித்து யாழ் வல்லை வெளியில் நடந்த கொடூரம்!!

காதல் படத்தில் வரும் கதாநாயகனைப் தந்திரமாக அழைத்து கடுமையாகத் தாக்கி வீதியில் போட்டது போல் யாழ் வல்லை வெளியில் காதலன் ஒருவன் நையப்புடைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டான். கடந்த முதலாம் திகதி அச்சுவேலிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியுடன் 24 வயதான இளைஞன் தலைமறைவாகியுள்ளான். யுவதியைக் காணவில்லை என அச்சுவேலிப் பொலிசாரிடம் யுவதியின் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இந் நிலையில் யுவதியும் இளைஞனும் வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள திருமணப் பதிவாளரிடம் பதிவுத்திருமணம் செய்த பின்னர் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் மறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் குடத்தனைப் பகுதியில் வாழ்ந்து வருவதை அறிந்த யுவதியின் பெற்றோரும் உறவினர்களும் இவர்களது வீட்டுக்குச் சென்று மிகவும் ஆசை வார்த்தைகள் கூறி இருவருக்கும் ஊரார் அறிய திருமணம் செய்து வைக்கின்றோம், ஆகவே எங்களுடன் வாருங்கள், அத்துடன் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் எமது முறைப்பாட்டையும் நீக்க வேண்டும். ஆகவே முதலில் பொலிஸ் நிலையத்துக்குப் போய் முறைப்பாட்டை நீக்கிய பின்னர் எங்கள் வீட்டுக்கு இருவரும் வாருங்கள் என  தந்திரமாக அழைத்துள்ளனர்.

இவர்களது சதித் திட்டத்தை அறியாத காதலர்கள் இருவரும் அவர்களுடன் புறப்பட்டனர். காதலனும் காதலியும் தனி ஆட்டோவிலும் காதலியின் பெற்றோர் ஹயஸ் வாகனத்திலும் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வல்லைச் சந்தியை அண்மித்தவுடன் திடீரென ஆட்டோவை வழிமறித்தது ஹயஸ் வாகனம். அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய காதலியின் உறவினர்கள் காதலனை ஆட்டோவில் இருந்து இறக்கி நிலத்தில் வீழ்த்தி கால்களால் மிதித்து உதைத்ததுடன் கடுமையாக பொல்லுகளாலும் அடித்து மயங்கச் செய்த பின்னர் காதலியான தமது மகளை  இழுத்துச் சென்று ஹயஸ்வானில் ஏற்றிச் சென்றுவிட்டனர். மயங்கிக் கிடந்த காதலனை அப்பகுதியால் சென்ற வழிப்போக்கர்கள் மீட்டு யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தல் அச்சுவேலிப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.