மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்? ஆளுநர் கவலை!!

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றையதினம் நடைபெற்றது.

யாழ். குடா நாட்டில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மீது அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் என்பன இடம்பெற்றிருந்தன. தென்மாகாண ஆளுநர் என்ற வகையில் வடமாகாண நிலை குறித்து உங்களது கருத்து என்ன என்று ஊடகவியலாளர்கள் வினா தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார   “எனக்குத் தெரிந்த வகையில் அவர்கள் புலிகள் இயக்கமல்ல. ஆவா போன்று விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்துசென்ற கொள்ளைக் குழுக்களே அவர்கள். இந்தக் குழுவை கைது செய்வதற்கும், சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் பொலிஸார் அவசியம். அதனால்தான் வடக்கில் உள்ள பொலிஸார் மற்றும் முப்படையினரின் பணிகளை துச்சமாக மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வடமாகாண முதலமைச்சருக்கு ஒரு செய்தியை வழங்குகிறேன். முதலமைச்சரை சுற்றியும் பாதுகாப்பு பிரிவினர் புடைசூழவிருப்பதால் அவருக்குப் பிரச்சினையில்லை. ஆனால் வடக்கில் அப்பாவி விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸாரும், முப்படையினரும் கடமைபட்டுள்ளனர். முப்படையினர் மற்றும் பொலிஸாரை வடக்கிலிருந்து நீக்குங்கள் எனக் கூவிவருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முதலமைச்சரும், விடுதலைப் புலிகளின் தலைவரது மைத்துனருமான சிவாஜிலிங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின்போது, உடனடியாக பொலிஸாரை ஈடுபடுத்தி அவர்களை கைது செய்யும்படி வலியுறுத்தினார். தீப்பிடித்த இடத்தைப் பாருங்கள். அதனால் விக்னேஸ்வரனை 12 வயதிலிருந்து எனக்குத் தெரியும். அந்த காலத்தில் விக்னேஸ்வன் அண்ணாவுக்கு இருந்த நல்லிணக்க குணம், இப்போது இனவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதால் குறைவடைந்திருப்பதையிட்டு கவலையடைகின்றேன்” என்றார்.