இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியினதும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரதும் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது ஒன்றிணைந்த எதிரணியினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த அணியினரின் ஒரு சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த போதிலும் அவர்கள் கூட பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடவில்லை.

அந்த வகையில் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான காலகட்டத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான தடைகளுக்குப் பின்னரேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கும் பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால் இந்தப் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்த பிரேரணையில் திருத்தங்கள் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதன் பின்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் இந்த பிரேரணை தொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டபோதிலும் அந்தப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கு முடியாமல் போனது.

அதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு பல திருத்தங்களை முன்வைத்தது. அந்த திருத்தங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து நேற்று முன்தினம் இந்த பிரேரணை மீது மீண்டும் விவாதம் நடத்தப்பட்டதுடன் இறுதியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புப் பேரவைக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமை தாங்குவார். இதன் பின்னர் படிப்படியாக இந்த அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் காலக்கிரமத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இறுதியாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பு வரைபு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கும் விடப்படும்.

இந்நிலையில் நாட்டின் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான மற்றும் தீர்க்கமான அரசியல் சூழலில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றம் பெற்றுள்ளது.

இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்தப் புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமும் உள்ளடக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணையில் இனப்பிரச்சினை என்ற பதம் பயன்படுத்தப்படாமல் தேசிய பிரச்சினை என்ற பதம் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒருவிதமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இந்த முயற்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றது.

இந்நிலையில் இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பாக பல்வேறு முக்கிய விடயங்களை வெளியிட்டிருக்கிறார்.

ஒற்றையாட்சிக்குள் நாட்டுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாத வகையில் தற்போதைய அதிகாரங்களைவிட மேலதிக அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குவது தொடர்பில் ஐந்து முதலமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

மேலும் தேர்தல் முறை மாற்றம் புதிய அரசியலமைப்புக்குள்ளேயே உள்ளடக்கப்படும். இது தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறு கட்சிகள் ஆகிய தரப்புக்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு யோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும். சிறுபான்மையின கட்சிகள், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் அனைத்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தமது அரசாங்கம் எவ்வாறு நகர்வுகளை முன்னெடுக்கும் என்பது தொடர்பில் ஒருவிதமான சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளார் என்றே கூறவேண்டும்.

எவ்வாறெனினும் இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கின்ற தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய – அந்த மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்று உள்ளடக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பில் அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பொதுவான இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியது முக்கியமாகும். விசேடமாக புதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் விஜயம்செய்து அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடனும் பேச்சுவார்த்தை நடத்திய நிபுணர்குழு கூட்டமைப்பிடமும் கருத்துக்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், அமர்வுகளை நடத்திய இந்த நிபுணர் குழு சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தது.

அதன்படி தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் இந்த நிபுணர்குழு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளது. இந்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை அரசியலமைப்புப் பேரவை பரிசீலிக்கவுள்ளதுடன் அந்தக்குழுவின் யோசனைகளைக் கருத்தில் கொண்டே புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது.

ஆனால் தற்போது நாட்டின் ஒருசில தரப்பினர் முன்வைக்கும் இனவாதக் கருத்துக்களைப் பார்க்கும் போது எங்கே அரசியல் தீர்வு நியாயமானமுறையில் அமைந்து விடாதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

விசேடமாக நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாட்டொன்றை நடத்தியிருந்த பொதுபலசேனா, இராவணாபலய மற்றும் சிஹல ராவய ஆகிய அமைப்புக்கள் கடும் விமர்சனங்களை தீர்வுத்திட்டம் தொடர்பில் முன்வைத்திருந்தன.

அதாவது சிங்கள – பெளத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டு வருகின்றது. எமது நாடு சூறையாடப்படுகின்றது. இந்நிலையில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு மாத்திரம் ஏன் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்? வடக்கில் தமிழ் மக்களுக்கு நிலங்களை தாரைவார்த்துக் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண சபையும் ஏனைய அமைப்புக்களும் ஒன்றிணைந்து வடக்கில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிக்கும் தந்திரத்தைக் கையாண்டு வருகின்றன. சிங்கள– பெளத்த இனத்தவரின் உரிமைகள் பூரணமடையும் வரையில் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறைகாட்டக் கூடாது எனவும் இவ்வமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் சிங்கள பெளத்த மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் வாழவேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்போது சிங்கள பெளத்த தலைவர்கள் அனைவரும் பிரிவினைக்கு அப்பால் ஒன்றிணைந்து இந்த நாட்டு சிங்கள மக்களை பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

குறிப்பாக இன்று வடக்கில் இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கிகொண்டுள்ள பிரிவினைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளன என்றும் இந்த அமைப்புக்கள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

அதாவது நீண்டகாலத்திற்குப் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதுடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்க முற்படும்போது அவற்றைக் குழப்பும் வகையில் இவ்வாறான இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமையானது கவலைக்குரியதாகும்.

அதுமட்டுமன்றி, இவற்றின் மூலம் நீண்டகாலத்திற்குப் பின்னர் நல்லிணக்கத்தை, முன்னெடுத்துச் செல்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பமும் பாதிக்கப்படும் அபாயமும் காணப்படுகின்றது.

காலத்திற்குக் காலம் இவ்வாறு தீர்வுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது இனவாத சக்திகள் மிகவும் ஆக்ரோஷமான முறையில் கருத்துக்களை வெளியிடுவதும் இதன் காரணமாக நல்லெண்ண முயற்சிகளும் தோல்வியடைந்த வரலாற்றையே நாம் கொண்டுள்ளோம்.

ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்பதை இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் மாற்றமான அரசியல் சூழல் உருவாகியுள்ள சூழலிலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வுத்திட்டம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக ஏகமனதாக மாற்றம் பெற்றுள்ள இந்த நிலையில் இதன் ஊடாக தற்போது கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க இரண்டு பிரதான கட்சிகளும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.