கிளிநொச்சி - முல்லைத்தீவிற்கான வழித்தட அனுமதி வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கான வழித்தட அனுமதிகளை வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கான அனுமதிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என கிளிநொச்சி சாலை நிர்வாகத்தால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையிலிருந்து பேருந்துகள் பல்வேறு இடங்களுக்குமான போக்குவரத்துக்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக வெளிமாவட்ட சேவைகள், குறுந்தூர சேவைகள் மற்றும் பாடசாலை சேவைகள் போன்றவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கிளிநொச்சி - முல்லைத்தீவிற்கான சேவையை மேற்கொள்ள வழித்தட அனுமதிகளை வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் இதுவரை அதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. அத்துடன் கிளிநொச்சியில் இருந்து தினமும் 8 தனியார் பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கான அனுமதியை வழங்கக் கோரி வட மாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் மகஜர்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரையில் அனுமதிகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சருக்கு மிக விரைவில் கடிதம் ஒன்றினை அனுப்பவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.