கிளிநொச்சியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்: மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் சரியான கழிவகற்றல் முகாமைத்துவம் இன்மையால் தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை காணப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் நுளம்பு மற்றும் இலையான்களின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகவும் காணப்படும் பரந்தன் பகுதியில் கழிவகற்றல் முகாமைத்துவம் சரியாக இல்லையென பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.குறிப்பாக பேருந்து நிலையம், பொதுச்சந்தை ஆகியன தினமும் உரிய முறையில் சுத்தம் செய்யப்படாத நிலையில் பரந்தன் பூநகரி வீதி, பரந்தன் முல்லை வீதி, ஏ-9 வீதி ஆகிய வீதிகளை ஒன்றிணைக்கும் சந்தியின் நான்கு புறமும் கழிவுகள் பொலித்தீன்கள், வெற்று போத்தல்கள் நீண்ட காலமாக காணப்படுகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை விட வடிகாலமைப்பு எதுவுமின்றி ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி உள்ளதாகவும், பொதுச்சந்தைக்கான தண்ணீர் வசதியின்மை மற்றும் மலசல கூடத்திற்கான தண்ணீர் வசதிகள் இன்மை என பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் பரந்தன் வர்த்தக சங்க நிர்வாகம் இதற்குப் பொறுப்பாகவுள்ள கரைச்சிப் பிரதேச சபை அறிவித்த போதும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் இல்லை என நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகள் தரித்து நிற்க முடியாத நிலையில் சுகாதார சீர்கேடு காணப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டு என கோரிக்கை விடுத்துள்ளனர்.