யாழ் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் அகப்பட்டார்

யாழ்ப்பாணம் – வரணி, நாவற்காடு பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் அடையாளங்காட்டியுள்ளார்.

இவ்வாறு அடையாளங் காட்டப்பட்டவர் அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வரணி, நாவற்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளந் தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் நள்ளிரவு 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டின் படுக்கை அறைக்கு அருகில் மூன்று குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.

எனினும் இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளர் அடையாளங்காட்டியுள்ளார்.

இவர் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், இவருடைய மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிசாரால் பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.