யாழில் வாள்களுடன் நடமாடும் நபர்கள் பற்றிய புதுத் தகவல்

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியமை தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரை குறித்த குழுவினர் வழிமறித்துள்ளதோடு, அவர்களைத் தாக்கவும் முயன்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாயினும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த மோட்டார் சைக்கிளிற்கு ( லீசிங் )பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.