தமிழரை பாரபட்சத்துடன் நடத்துகிறது, வாக்குறுதியை மீறுகிறது அரசாங்கம் – சம்பந்தன் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் கைதிகள் மற்றும் பலவந்தமாக காணாமற்போனோர் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“காணாமற்போனவர்கள் தொடர்பான விடயம் பாரிய மனிதாபிமான பிரச்சினையாக காணப்படுகிறது. காணாமற்போனோர் பற்றிய விடயங்களுக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தஅரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

காணாமற்போனோர் பிரச்சினை இயல்பு நிலைக்கு திரும்புவதிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் சிக்கலான விடயமாகவுள்ளது. எனவே நாட்டினதும் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களினதும் நலனுக்காகவும் இந்தப்பிரச்சினையை துரிதமாக தீர்க்க வேண்டியது அவசியம்.

கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் முடிவுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் காணாமற்போனோர், காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் நிச்சயமற்ற தன்மையே  காணப்படுகிறது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில்  நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் பலவந்தமாக நபர்கள் காணாமலாக்கப்பட்டமைக்கான போதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நபரொருவர் அரச அதிகாரியினால் கைது செய்யப்பட்டாலோ அல்லது சரணடைந்தாலோ அந்த நபரின் பாதுகாப்பு, பொறுப்பு ஆகியன அரசாங்கத்திற்கே உரியது. அதற்கான பதிலளிக்கும் கடப்பாடும் அரசாங்கத்திற்கே உள்ளது என ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் எங்கு இருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக முழுமையான விபரத்தை அறிந்து கொள்ளும் உரிமை உறவினர்களுக்கு இருப்பதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அதன் பரிந்துரைகள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.  அந்த அறிக்கையில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

அதன் பின்னர் பரணகம ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் வரை அந்த ஆணைக்குழுவில் 17,329 வரையிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

குற்றமிழைத்தவர்கள் சட்டத்தினால் தமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தண்டனை விலக்குரிமையுடன் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது. ஆனால், புதிய அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக செயற்படவேண்டும்.

காணாமற்போனவர்களின் குடும்பங்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் நியாயமானவை என்பது அனைவரும் அறிந்த விடயம்.ஆணைக்குழுக்கள் முன்னிலையில் மக்கள் சாட்சியமளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னைய அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ஆணைக்குழுக்களின் முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக புதிய அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் உண்மை, நீதி நல்லிணக்கம், மீள் நிகழாமை மற்றும் இழப்பீடு ஆகிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இது தொடர்பிலான விடயங்கள் என்னவாகவுள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் காணாமற்போனோர் தொடர்பில் காணாமற்போன சான்றிதழ் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

காணாமற்போன சான்றிதழ் என்பது மரணச் சான்றிதழ் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். காணாமற்போன சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் மற்றும் அவர்களுக்கு உரித்துடையவற்றை பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

காணாமற்போனவர்கள் தொடர்பிலான திட்டம் என்னவென்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்கம் சரியான நோக்கத்துடன் தயக்கமின்றி செயற்படவேண்டும். காணாமல் போனோரின் குடும்பங்கள் திருப்தியடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலிருந்து தவறிவிடக் கூடாது.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட் டுள்ள அரசியல் கைதிகள் சமூக குற்றச்சாட்டுக்களை கொண்டவர்கள் கிடையாது. அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் 90 வீதமானவர்கள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் கைதிகள் மீது மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்?

நாங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறோம். சமத்துவம் பேணப்படாத நிலைமை காணப்படுகிறது. இந்நிலைமை தொடர்ந்தால் நம்பிக்கை ஏற்படாது .நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்?

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வாறு தடுத்து வைக்க முடியும்? எவ்வாறு தண்டனை வழங்க முடியும்?

இதன் மூலம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கம் மீறுகிறது.

தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒரு சில தரப்பினர் கூச்சலிடுகிறார்கள். அவர்களின் கூச்சலுக்கு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தார். அவர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் மீள விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மீள உருவாகுவதற்கான செயற்பாடுகளை தற்போது வரையில் மேற்கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், பிரதி அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். இன்டர் போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். அவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதனால் மீண்டும் ஈழம் உருவாகி விடும் என மகிந்த ராஜபக்சவின் அதரவுத் தரப்பினர் கூறுவது முட்டாள்த்தனமானது.

அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல் ரீதியாக அணுகி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தி அமைப்பதற்கான ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கம் அந் ச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வாறு தடுத்துவைக்க முடியும்?

அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளின் மூலமே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்” என்று தெரி்வித்தார்.