புலம்பெயர்ந்து கனடா சென்ற தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செய்த லீலைகள்

இலங்கையில் இருக்கும்போது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த 7 ஆம் நாள் திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

ஐ.பீ. எதிரிசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட தொடர்விசாரணையில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன்மூலம் கனடா நாட்டிலிருந்து வந்த தம்பதிகள் பொய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், கனடா நாட்டில் காப்புறுதி பெறுவதற்காகவே தாம் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் நாள் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.