குடாநாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 87 பேர் கைது

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரை 87 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓகஸ்ட் 4ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 7ஆம் நாள் காலை 7 மணி வரை யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய், நெல்லியடி, மானிப்பாய், பருத்தித்துறை காவல் நிலையப் பகுதிகளில், இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன.

சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லதீப்பின் வழிகாட்டலின் கீழ், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு, வவுனியா பிரிவுக்கான சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி திசநாயக்கவின் தலைமை தாங்கியிருந்தார்.

இதன் போது, 87 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாவர்.

இந்த தேடுதலின் போது, 37 உந்துருளிகள், 7 டிப்பர் வாகனங்கள், ஒரு டிமோ பாரஊர்தி என்பனவும் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.