தெற்கிற்கு தப்பியோடும் ‘ ஆவா’ தலைவர்கள்!

வடக்கில் நடத்தப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர், ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் தெற்கு பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பன பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் வடக்கில் பொலிஸார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அங்கிருந்து தப்பியோடும் ஆவா குழுவின் தலைவர்கள், தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் ஆவா குழுவின் முக்கிய தலைவனென கருதப்படும் விக்டர் நிசாந்தன் மற்றும் அவரது சகாக்கள் மூவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.