யாழ் அரசடிப் பகுதியில் வாள் வெட்டில் ஈடுபட்ட 4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேகநபர்களுக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றால் நேற்று (25.07.2017) கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் தை மாதம் 30 ம் திகதி நல்லூர் அரசடிப்பகுதியிலுள்ள கடையொன்றினுள் உட்புகுந்த மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடையிலிருந்த இருவரை வாள்களால் வெட்டியதுடன் கடையிற்கும் நெருப்பு மூட்டி சென்றனர். இச்சம்பவம் தொடர்பான பதிவுகள் அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியதுடன் அக்காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக 07 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக நீதிமன்றின் உத்தரவின் பேரில் 07 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டவேளை நான்கு சந்தேக நபர்களுக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பரீட்சைக்கு தோன்றுவதை அடிப்படையாக கொண்டு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது.

நான்கு சந்தேகநபர்களும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு அரச உத்தியோகத்தர்களின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீதிமன்றில் கையொப்பமிட வேண்டுமெனவும் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் இவ்வழக்கின்  ஏனைய மூன்று சந்தேக நபர்களின் விளக்கமறியலை அடுத்தமாதம் 8ம் திகதி வரையும் நீடிக்குமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.