சுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்? அனுராதபுரம் சிறையில் அடைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமாரை கொழும்புக்கு தப்பிச்செல்ல உதவியதாக சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் யாழ். உள்ளிட்ட பகுதிகளுக்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 209வது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.