கிளிநொச்சி - கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு உடனடியாக குடிநீரை வழங்க தீர்மானம்

கிளிநொச்சி - தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு உடனடியாக குடிநீரை வழங்க வேண்டும் என கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு பிரதேச சபை குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த 12 நாட்களாக அந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக தற்போது இடம்பெற்று வருகின்ற கண்டாவளைப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சு. பசுபதிப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக இணைத்தலைவர்கள் கேள்வியெழுப்பியபோது, பிரதேச செயலர் ரீ.முகுந்தன் அந்த கிராமத்திற்கான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் குடிநீர்விநியோகத்தை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக மாற்று வீதியூடாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு இணைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.