இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு பணிப்புரை

இந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி நாளைமறுதினம் குறித்த படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளை விடுவிப்பது தொடர்பில் இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்றில் அமுல்படுத்தப்பட்ட இழுவைப்படகு சட்டமூலம் ஆகியவற்றின் பிரகாரம் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களின் படகுகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், இதற்கான நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் வட. மாகாண கடற்றொழில் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆலம் தெரிவிக்கையில், ”வெளிநாட்டு படகுகளை கையாளும் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

எதிர்வரும் காலங்களில் எமது கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வரகூடாது என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு படகுகளை கையளிக்க வேண்டும்.

அத்துடன், அமுல்படுத்தப்பட்ட சட்டமூலத்தின் பிரகாரம் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை புதிய நடைமுறையின் கீழ் கையாள வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.