முறிகண்டி புகையிரத கடவையில் ஆணின் சடலம் மீட்பு

முறிகண்டி, கொக்காவில் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட புகையிரத கடவையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள குறித்த சடலம் நேற்று கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து காணாமல் போனவரின் சடலமா என மாங்குளம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி நேற்று பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலிருந்து மாங்குளம், கொக்காவில் பிரதேசங்களிற்கு இடைப்பட்ட புகையிரத கடவையில் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பின்னர் குறித்த நபரை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று முறிகண்டி, கொக்காவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம் குறித்த நபரினுடையது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.