யாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி நடைபெற்று வருவதாகவும் முகவர்கள் எனக் கூறிவருபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என யாழ். மாவட்ட வங்கியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் சிலநாட்களுக்கு முன்னர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளிடம் சென்ற சிலர் தாம் தனியார் வங்கி ஒன்றின் முகவர்கள் என தெரிவித்து குறித்த வங்கியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி அவர்களுடைய விபரங்களை பெற்றுள்ளனர்.

சில நாட்களின் பின்னர் அந்த நபர்கள் குறித்த இளைஞர் யுவதிகளிடம் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் 30ஆயிரம் ரூபாய் பணத்தை வைப்பிலிடும் படியும் கூறியுள்ளனர். அதை நம்பிய இளைஞர்கள் பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்துள்ளனர். இவ்வாறு 3 நாட்களுக்குள் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே எந்தவொரு வங்கியிலும் முகவர் ஊடாக பணம் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்பதை பொது மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வங்கியின் முகவர் என தெரிவித்து வருபவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக யாரேனும் புதிய விபரங்களை தெரிவித்தால் அவ்வாறான நடைமுறைகள் உள்ளனவா என குறித்த வங்கியில் நேரடியாக தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

வேலைவாய்ப்பை பெறவிரும்புபவர்கள் குறித்த வங்கிகளின் இணையத்தளங்களுடாகவோ அல்லது ஆளணி முகாமைத்துவ பிரிவின் ஊடாகவோ தமது விண் ணப்பங்களை அனுப்பமுடியும். அல்லது ஒரு வங்கியின் கிளை முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் அல்லது வங்கி ஊழியர்களிடம் வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பை பெற்றுத்தருவாக கூறி பணமோசடியில் ஈடுபடுவது யாழில் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எமக்கு தெரியப்படுத்தினால் அந்த பணத்தை மீளபெற்றுக்கொள்ள நாம் வழிமுறைகளை ஏற்படுத்தி தருவோம்.

தெரியப்படுத்த வேண்டிய தொலைபேசி இலக்கம் 0049 152 192 47 455