புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில் அழைத்து, 'நாங்கள் குற்றவாளிகள் அல்ல. இந்த வழக்குத் தொடர்பில் எவ்வித அறிக்கைகளையும் ஊர்காவற்றுறை பொலிஸார் கடந்த 8 மாதங்களாக சமர்பிக்கவில்லை' என்றனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்ற முன்னாள் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், வவுனியா மேலதிக நீதவானாக இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து, ஊர்காவற்றுறை நீதவனாக புதிதாக கடமையேற்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் முதன்முறையாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.