அகற்றப்பட்ட தூபி தொடர்பில் அமைச்சரவையில் பிரஸ்தாபனம்

குறுகிய காலச் சிந்தனையுடன் யாழ் பல்கலையில் இரவோடு இரவாக கட்டப்பட்ட தூபி இரவோடு இரவாக அகற்றப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழக நிர்வாகத்தால் அகற்றப்பட்டதாக கூறப்படும் தூபி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டவரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக யாழ் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டமையாலேயே குறித்த தூபி அகற்றப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த அனைத்து போராட்ட அமைப்புகளை சேர்ந்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமானது.

கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை நான் கொண்டுவந்த போது அதை வழிமொழிய சபையில் இருந்த தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் முன்வந்திருக்கவில்லை.

ஆனால் அன்று நான் முன்வைத்த பிரேரணையை தென்னிலங்கையை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வழிமொழிந்திருந்தார்.

அத்துடன் இதற்கு தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு இன்மையினால் தொடர்ந்தும் அதை என்னால் முன்னெடுக்க முடியாது போனது.

அன்றே இந்த பிரச்சினைக்கு ஒருமித்து என்னுடன் இணங்கி அதை நடைமுறைப்படுத்த ஏனை தமிழ் உறுப்பினர்கள் முன்வந்திருந்தால் இன்று இந்த அவமானங்களும் அசௌகரியங்களும் ஏற்பட்டிருக்காது என நினைக்கின்றேன்.

அதேபோல கடந்த நல்லாட்சி காலத்தில் நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எந்தளவு எமது மக்களுக்கு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு தூபியை அமைத்தவர்கள் செய்ததா தவறு அல்லது அதை சட்டமுரணானது என கூறி இடித்தவர்கள் செய்ததா தவறு என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

http://tamil.adaderana.lk/


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *