உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கின்றது! அமைச்சர் டக்ளஸ்

போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன் சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களாக தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்து பற்றி பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது அவர் குறித்த உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதாவது, உண்மை வரலாறு தெரிந்தவர்களும், தன்னை நன்கறிந்த மக்களும், முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் தான் வெளியிட்ட கருத்து தொடர்பான உண்மைத் தன்மையை நன்கு அறிவார்கள்.

உண்மை வரலாறு தெரிந்த திலீபனின் கொலை வெறியினால் பாதிக்கப்பட்ட அப்போது தப்பியோடிவிட்டு தற்போது திலீபன் தொடர்பில் வஞ்சகப் புகழ்ச்சி பாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் தரப்பினர், தனது குறித்த கருத்துக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மையில் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட பூசகர், பசுவதைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய போதிலும், குறித்த கொலை தொடர்பான விசாரணைகளில் வேறொரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகங்களில் செய்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டிற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன், மனிதப் படுகொலைகளைத் தூண்டியும், அதனை ஊக்குவித்தும், வரவேற்றும், வந்துள்ள தமிழர் தரப்பின் போலித் தேசிய அரசியல் கூட்டத்திற்கும், இந்தக் கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்ற சில தமிழ் ஊடக வர்த்தகச் சந்தைகளுக்கும் தான் உண்மைகளை சொல்கின்ற போது, கசப்பு ஏற்படுவது இயல்பு.

மக்களின் அவலங்களுக்கு எதிராகவும், அந்த அவலங்களை விளைவிப்போருக்கு எதிராகவும் போராட வேண்டிய அதேநேரம், அந்த அவலங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், அத்தகைய அவலங்கள் மீள ஏற்படாமல் இருப்பதற்கான செயற்பாடுகள் தன்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, எமது மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு இப்போதாவது அனைவரும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையே தன்னால் முன்வைக்க முடியுமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *