தமிழின நன்மைக்காகவே விக்னேஸ்வரன் மீதான வழக்கினை மீளப் பெற்றேன்! டெனீஸ்வரன்

தமிழினத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டே வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மீளப்பெற்றேன் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தேன். வட மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து ஈற்றில் என் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களுமில்லை என்றே கூறியிருந்தது.

எனினும், விக்னேஸ்வரனின் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சிலர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்களும் விசாரணை அறிக்கையிலும் காணப்பட்டிருந்தன. அத்தகைய நிலையில் அவர்களுடன் சேர்த்து எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாத என்னையும் நீக்கியிருந்தார். அதன் பின்னணியில் சில அமைச்சர்களும், பதவி ஆசை கொண்டிருந்தவர்களும் இருந்துள்ளார்கள்.

இவ்வாறான பின்னணியில் என்னை நிரூபிப்பதற்கு எனக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் சென்று நான் நிரபராதி என்று கூறவும் இயலாது. ஆகவே தான் உயர் நீதிமன்றத்தினை நாடினேன். உயர் நீதிமன்றை துணிந்து நாடியதன் மூலமே நான் எவ்விதமான தவறுகளையும் இழைக்கவில்லை என்பது வெளிப்படுவதற்கு போதுமானதாக இருக்கின்றது.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் நேர்மையானவர். நடுநிலையாக செயற்படும் ஒருவர். நியாயமாகச் செயற்படக்கூடிய ,பேசக்கூடிய ஒருவர். ஆனால் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அவரிடத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. தற்போது கூட தமிழர்கள் சார்பில் அவர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. அவருக்கு எதிராக எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

அவ்வாறானதொரு தருணத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அவர் மீதான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்ற நிலைமைகளே அதிகமாக இருந்தது. ஆகவே அத்தகைய ஒருவருக்கு என்னால் பிரச்சினைகள் ஏற்படுவதை விரும்பவில்லை. எமது இனத்திற்காக உரிமையுடனும், உறவுடனும் செயற்படும் ஒருவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.

அத்துடன் விக்னேஸ்வரன் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. அதன் பின்னர் நிரந்தரமாக விடுக்கப்பட்ட உத்தரவையும் அவர் செயற்படுத்தவில்லை. மேலும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தால் விக்னேஸ்வரனுக்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்திருக்கும் நிலையே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *