சுமந்திரன் கட்சியில் நீடித்தால் 3 கோடி ரூபாய் செலவழித்தாலும் கட்சி வெல்ல முடியாது! நாவலன் போர்க்கொடி

சுமந்திரன் என்மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக முறைப்படு செய்ததால் என்னை விசாரணையின்றி கட்சியிலிருந்து நீக்க சுமந்திரன் கோரியுள்ளார் என தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.

நாவலனை கட்சியிலிருந்து விசாரணை எதுவுமின்றி உடனடியாக நீக்குமாறு ஆபிரஹாம் சுமந்திரன் கட்சியின் ஒழுக்காற்று குழுவினைக் கோரியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையின் செயலாளரும், தமிழ் அரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு உறுப்பினரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய கருணாகரன் நாவலன் ஆகிய நான் 2002ம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

என்னை இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து விசாரணை எதுவுமின்றி உடனடியாக நீக்குமாறு ஆபிரஹாம் சுமந்திரன் கட்சியின் ஒழுக்காற்று குழுவினைக் கோரியுள்ளதாக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்திருந்தன.

அதுமாத்திரமின்றி கடந்த 29.08.2020 அன்று வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் நான் உட்பட இன்னும் எட்டுப் பேரை நீக்குமாறு கோரிய கடிதத்தினை விநியோகித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் சுமந்திரனின் பாதுகாப்புப் படையினரால் (16 விசேட அதிரடிப்படையினர்) படுமோசமாக தாக்கப்பட்டிருந்தேன், இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன்.

மேற்படி முறைப்பாடானது சுமந்திரனுக்கு எதிரானது அல்ல. மேற்குறிப்பிட்ட விசேட அதிரடிப்படையினருக்கு எதிரானதே. இந்நிலையில் பேரினவாதம் மீது மிகுந்த கரிசனம் கொண்டு என்னைக் கட்சியிலிருந்து நீக்குமாறு சுமந்திரன் கூறியிருப்பது வேடிக்கையானது.

யாழ். மத்திய கல்லூரியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணும் நிலையத்தின் முகவராக ( Polling Agent ) கடந்த ஆறாம் திகதி காலை ஏழு மணியிலிருந்து நான் செயற்பட்டிருந்தேன்.

அன்றைய தினம் திட்டமிட்டு விருப்பு வாக்குகள் வெளியிடுவதனை இழுத்தடிப்பு செய்வதற்கு எதிராக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரின் மகன் சேனாதிராஜா கலை அமுதன், கருணாகரன் குணாளன் உள்ளிட்ட பலர் அமைதியான முறையில் அங்கு குரல் எழுப்பியிருந்தனர் . இந்நிலையில் 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்போடு ஆரவாரமாக நடுச்சாமத்தில் அங்கு நுழைந்தார் சுமந்திரன்.

சுமந்திரனுக்கு எதிராக அங்கு குழுமியிருந்த அங்கஜனின் ஆதரவாளர்கள் சற்று மோசமாக நடந்துகொண்டனர் . ஆனாலும் சுமந்திரனும் அவரது சகாவான சயந்தன் என்பவரும் உள்ளே மிகவும் பாதுகாப்பாகவே சென்று அமர்ந்து இருந்தனர் .

இந்நிலையில் சம்பந்தமில்லாமல் அரசாங்க அதிபரின் (மாவட்ட செயலர்) அனுமதியை பெற்றுக்கொள்ளாமலேயே அங்கு குழுமியிருந்த அனைவர் மீதும் மிகவும் மோசமாக ஆயுதங்களாலும் , கால் கைகளாலும் STF படையினர் தாக்கத் தொடங்கியிருந்தனர் .

அதனை நிறுத்துமாறு சிங்கள மொழியில் தட்டிக்கேட்ட என் மீதும், ஆங்கிலத்தில் தட்டிக்கேட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கலை அமுதன் மீதும் மோசமான தாக்குதலை விசேட அதிரடிப்படையினர் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தனர் .

மேற்படி மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நானும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியொருவரும் குறித்த 16 விசேட அதிரடிப்படையினருக்கும் எதிராக முறைப்பாடு செய்திருந்தோம்.

வன்முறையே விரும்பாதவன் தானென்று தேர்தல் மேடைகளில் பொய் பேசித்திரிந்த சுமந்திரன் எனும் நபர் மேற்படி முறைப்பாட்டுக்கெதிராக பொங்கியெழுந்து என்னை கட்சியிலிருந்து விசாரணையேதுமின்றி உடனடியாக நீக்குமாறு கோரியிருக்கிறார்.

மூன்றாவது தலைமுறையாக பரம்பரை பரம்பரையாக தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உறுப்பினராக விளங்கி வருகின்ற என்னை கட்சிக்குள் எதுவித தொடர்புமில்லாது தென்னிலங்கையிலிருந்து ஊடுருவியாக உட்புகுந்துள்ள சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குமாறு கோரியிருக்கிறார்.

தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்களோடு மாத்திரமல்லாமல் ஏனைய கட்சி உறுப்பினர்களோடும் பொது மக்களின் நன்மைகருதி இணைந்து ஆரோக்கியமான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவரென்கிற நற்பெயர் எனக்கு காணப்படுகின்றது .

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் மாத்திரமல்லாது தமிழ்த்தேசியம் சார்ந்த நிகழ்வுகள் , போராட்டங்களை தீவகத்தில் முன்னாள் போராளிகளோடு இணைந்து முன்னெடுப்பதில் என்றுமே நான் முன்நிற்பவரென்பதனை சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.

ஆனால் தாயக விடுதலை போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருகின்ற சுமந்திரன் போன்ற ஊடுருவிகள் என்னை கட்சியிலிருந்து நீக்குமாறு கோருவது வேடிக்கையானது. .

2018ல் வேலணை பிரதேச சபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 8 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது . எனது சொந்த ஊரான புங்குடுதீவில் கூட்டமைப்பு அனைத்து வட்டாரங்களையும் (மூன்று) கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது . ஈபிடிபி ஆறு ஆசனங்களை பெற்றிருந்தது .

தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை தவிசாளர் வேட்பாளராக நான் முன்னிறுத்தப்பட்டிருந்தேன். தவிசாளராக தெரிவு செய்யப்படுகின்றபோது எனது மாதாந்த சம்பளம் முழுவதையும் பொதுநலன் பணிகளுக்கே பயன்படுத்துவேனென்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தேன். இலங்கையில் வேறு எவரும் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் இல்லை .

ஆனாலும் தவிசாளர் தெரிவின்போது ஆறு ஆசனங்களை மாத்திரமே பெற்று தேர்தலில் தோல்வியடைந்திருந்த ஈபிடிபி குறுக்குவழியால் தமிழர் விடுதலைக்கூட்டணி , சிறிலங்கா சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுன உள்ளிட்ட தமிழர் விரோத கட்சிகளுடன் இணைந்து தவிசாளர் பதவியை கைப்பற்றியிருந்தது .

மேற்படி தவிசாளர் பதவியை ஈபிடிபி கைப்பற்றிய விதம் வேடிக்கையானது . இங்குதான் ஆபிரஹாம் சுமந்திரனின் அதி புத்திசாலித்தனம் வெளிப்பட்டது . தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பும் – ஈபிடிபியும் தலா 9 வாக்குகளை பெற்றுக்கொண்டன. அதாவது தெரிவு சமநிலையில் முடிவடைந்தது .

தார்மீக அடிப்படையில் கூட்டமைப்பின் வேட்பாளராகிய நானே தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் வேலணையில் அதிக வட்டாரங்களில் வென்றதும் , மக்களின் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே.

ஆகவே சமநிலையில் காணப்பட்ட தருணத்தில் இவ்வாறுதான் முடிவு எட்டப்பட்டிருக்கவேண்டும். அல்லது குறைந்த பட்சம் இரு கட்சிகளுக்கும் நான்கு வருடங்களை சமமாக பிரித்து வழங்கியிருக்கலாம்.

ஆனால் நடைபெற்றது என்னவென்றால் மக்களின் ஜனநாயக உரிமையினை சமநிலையில் முடிவுற்ற கிரிக்கெட் போட்டியொன்றின் முடிவை தீர்மானிப்பது போன்று நாணய சுழற்சியில் ( TOSS ) தீர்மானித்த கேவலம் அரங்கேறியது . குலுக்கலில் நான் துரதிஸ்டவசமாக தோல்வியடைந்தேன்.

மக்களின் அபிப்பிராயம் , தெரிவு , தேர்தல் ஜனநாயகம் போன்றவை குலுக்கல் முறையில் தோற்கடிக்கப்பட்டது . இது தவறான செயற்பாடு. உலகில் வேறெங்கிலும் இதுவரை இவ்வாறு நடைபெற்றதாக தகவல் இல்லை.

இந்த உள்ளூராட்சி தேர்தல் மறுசீரமைப்பு யாப்பினை வரைந்தவர்களில், அங்கீகரித்தவர்களில் , முன்னெடுத்தவர்களில் மேற்குறிப்பிட்ட ஆபிரஹாம் சுமந்திரனும் ஒருவர். அவரை விட அறிவாளி தமிழர் மத்தியில் இல்லையென்று கூறுபவர்களுக்கு இந்த சம்பவம் சமர்ப்பணம் .

ஆனாலும் தோல்வியில் துவண்டு விடாத நான் வேலணை பிரதேச சபை உறுப்பினராக தனது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றேன்.

2018 மார்ச்சில் பதவியேற்றதிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக எனது மாதாந்த வேதனத்தினை பொதுநலன் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றேன். அது தொடர்பான செய்திகளையும் பத்திரிகைகள் , இணையத்தளங்கள் ஊடாக அறிந்திருப்பீர்கள். .

தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக்கட்சியிலிருந்தும் சிறந்த செயற்பாட்டாளர்கள், மக்கள் செல்வாக்குமிக்கவர்கள் வெளியேறுவதற்கு முழுமுதற் காரணமாய் அமைந்த சுமந்திரன்,

யுத்தம் நடைபெற்ற காலங்களில் பல நூற்றறுக்கணக்கான அப்பாவித் தமிழ் மாணவர்களினதும், பொது மக்களினதும் படுகொலைக்கு காரணமாய் அமைந்திட்ட சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரினைக் காப்பாற்றும் நோக்கில் கருணாகரன் நாவலனாகிய என்னை கட்சியிலிருந்து நீக்குவதாக கோரியிருப்பதானது எமது கட்சியின் இலட்சியப் பாதை எத்திசை நோக்கிச் செல்கிறது எனும் கேள்வி எழும்புகிறது.

சுமந்திரன் தொடர்ந்தும் எமது கட்சியில் நீடிப்பாரானால் எதிர் வருகின்ற வடமாகாண சபைத் தேர்தலில் மூன்று ஆசனங்களைக் கூட எம்மால் கைப்பற்றமுடியாத நிலையே காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரை நான் சந்தித்திருந்தேன். எதிர்வரும் தேர்தலில் நீங்கள் எங்கள் கட்சியின் சார்பில் மீளவும் போட்டியிடப் போகின்றீர்களா எனக் கேட்டதற்கு ‘சுமந்திரன் கட்சியில் நீடிக்கும் வரை 3 கோடி ரூபாய் செலவழித்தாலும் தன்னால் வெல்ல முடியாதென்றும், ஆனால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினால் வெறும் 20 இலட்சம் ரூபாயோடு தன்னால் தேர்தலில் வெல்ல முடியுமென்று ஆணித்தரமாகக் கூறினார்.

வாக்காளப் பெருமக்களினதும் எமது கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களினதும் கருத்து இவ்வாறே காணப்படுகிறது.

ஆகவே என்னைப் போன்றவர்கள் இந்தக் கட்சியில் நீடிக்க வேண்டுமா அல்லது கட்சிக்குள் பின் கதவால் ஊடுருவி கட்சியை அழித்துக் கொண்டிருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் நீடிக்க வேண்டுமா என்பதனை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilwin


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *