மாவையை ஓரங்கட்ட தமிழரசுக்கட்சிக்குள் நடந்த சதி! அம்பலப்படுத்துகிறார் தவராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றது ஒரு தேசிய பட்டியல் ஆசனம் என்ற போதும் இலங்கை வரலாற்றிலே அதிகம் பேசப்பட்ட ஒரு தேசிய பட்டியல் ஆசனமாக அது இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவருமான கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கேள்வி – தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கு கூட்டமைப்பில் ஏன் தங்களை போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு சட்டக் குழுவை உருவாக்குவதில் தமிழரசுக் கட்சி இதுவரை கவனம் செலுத்தவில்லை?

பதில் – இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் சட்டங்கள் இயற்றப்படுகின்ற இடமாக நாடாளுமன்றமே இருக்கின்றது. தமிழரசுக்கட்சியின் ஆரம்ப காலங்களில் 90 வீதமானவர்கள் சட்டம் படித்தவர்களாகவே இருந்தார்கள்.

சிலர் நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் கூட சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றவர். ஆனால் இன்று நிலமை வேறு.

கூட்டமைப்பைப் பொறுத்தவரை இரண்டே சட்டத்தரணிகள் தான். ஒருவர் சம்பந்தன் ஐயா மற்றவர் சுமந்திரன்.

அதுபோல தமிழ்த் தேசிய உணர்வோடு கொழும்பில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களின் நானும், தமிழரசுக் கட்சி கொழும்பு கிளை செயலாளர் எனது கனிஷ்ட சட்டத்தரணி ஆர்னோல்ட் பிரிந்தனுமே வெளிப்படையாக இருக்கின்றோம்.

நான் இப்படிச் சொல்லும்போது ஏன் கணகஈஸ்வரன் இருக்கிறார் என்று சொல்லக்கூடும் ஆம். கணகஈஸ்வரன் ஒரு தமிழ் உணர்வாளர், தமிழர்கள் மீது நிரம்பிய பற்றுக் கொண்டவர்.

சரி அவரையும் சேர்த்து கொள்ளலாம். அதுபோல யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுடன்; வழக்குகளுக்கு; போகின்ற சட்டத்தரணி சயந்தனையும் சேர்த்தால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு ஆறு அல்லது ஏழு பேர் தான் இருக்கின்றோம். நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

இந்த சூழ்நிலை எப்படி வந்தது? கட்சிக்குள் நடக்கும் தன்னிச்சையான முடிவுகளால் வந்த பிரச்சினை தான் இது. பின்னர் எவ்வாறு சட்டத்தரணிகளை வைத்து ஒரு குழுவை மக்கள் நலனுக்காக தொடங்க முடியுமா?

அதை விட ஒரு பொது நலன் சார்ந்த சிந்தனை இருக்க வேண்டும். இந்த ‘வீடு’ என்பது பொது உடமை. அதனை ஒருவர் அல்லது இருவர் சொந்தம் கொண்டாட முடியாது.

நாங்கள் ஒரு காலத்தில் இருந்து விட்டு அதனை அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். சுமந்திரனை பொறுத்தவரை சட்டம், ஆங்கிலம், சிங்களம் தெரிந்தவர்கள் அல்லது தன்னை விட ஆளுமை கூடியவர்கள் இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது என யோசிக்கிறார்.

நான் 2014 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை சட்டத்துறையின் செயலாளராகவும், இணைப்பாளராகவும் செயல்படுகின்றேன்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் கடந்த 40 ஆண்டுகளில் பயங்கரவாதத்தடைச் சட்டம் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில் வாதாடி ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

முதலாவது அரசியல்கைதி வழக்கில் இருந்து இதுவரைக்கும் வாதாடி கொண்டு உயிரோடு இருக்கும் ஒரே சட்டத்தரணி நான்தான். நாட்டிலுள்ள மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 402 வழக்குகளில் 401 வழக்குகளில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

அரசியல் கைதிகள் தொடர்பாக 40 ஆண்டுகள் வாதாடிக் கொண்டிருக்கின்ற என்னை அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான எந்த பேச்சு வார்த்தைகளுக்கும் அழைக்கவுமில்லை, ஆலோசனை கேட்கவுமில்லை.

அதேநேரம் அரசியல் கைதிகளின் வழக்குகளில் சுமந்திரன் ஆஜராகவில்லை. அரசியல் கைதிகள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை அவர் செய்வதுமில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய்யப்பட்ட கைதிகளில் ஒரு அரசியல் கைதி கூட பேச்சுவாத்தைகளின் வலிமையால் விடுதலை செய்யப்படவில்லை.

அரசினால் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களும், வழக்கு தாக்கல் செய்ய சாட்சிகள் இல்லாமையாலும் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் அரசியல் கைதிகளின் வழக்குகளின் தன்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் நானும் ஏதாவது செய்கிறேன் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.

இப்படியான சூழ்நிலைகளில் இருக்கும் போது எப்படி பொது இணக்கப்பட்டில் ஒரு சட்டக் குழவை ஆரம்பிக்க முடியும்?

கேள்வி – கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியை நியமிப்பதில் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கே தெரியாமல் பின்பற்றப்பட்ட அணுகுமுறைகள் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் குறித்து மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?

பதில் – கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பாக நான் கடந்த காலங்களில் பேசி வந்து இருக்கின்றேன். கொழும்பில் போட்டியிட்டிருந்தால் ஒரு ஆசனமும் இன்னுமொரு தேசியப்பட்டியலும் கிடைத்திருக்கும்.

சில விடயங்களால் அது நடைபெறவில்லை. கிடைக்கப்பெற்றது ஒரு தேசிய பட்டியல் ஆசனம். ஆனால் இலங்கை வரலாற்றிலே அதிகம் பேசப்பட்ட ஒரு தேசிய பட்டியல் ஆசனமாக அது இருக்கிறது.

உண்மையில் தேசிய பட்டியல் நியமனத்தை கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய கட்சியின் தலைவர்கள் சேர்ந்து கலந்துரையாடி முடிவு எடுத்திருக்க வேண்டும்.

அதுதான் சரியான நியமனம் . அதனை இவர்கள் உண்மையாகவே மீறியிருக்கிறார்கள். அதற்கு செயலாளர் ஆயிரம் விளக்கம் கொடுக்கலாம்.

ஆனால் இது ஒரு திட்டமிட்ட சதி முயற்சி ஆகும். செயலாளரின் செயற்பாடுகளை அவதானித்தால் உங்களுக்கு புரியும் . தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எட்டாம் திகதி தீர்மானிக்கப்பட்டது எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் தேசிய பட்டியல் தெரிவை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டிய இறுதித் திகதி ஆகஸ்ட் 14.

இவர் அதனை 8ஆம் திகதி தீர்மானித்து அவசர அவசரமாக ஒன்பதாம் திகதி ஒரு ஊடக சந்திப்பு ஒழுங்கு செய்து அறிவிக்கிறார்.

இந்த அவசரமும் தொடர்ச்சியான செயல்பாடும் தான், பின்னணியில் ஒரு சதி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க வைக்கிறது. இங்கே அம்பாறை மாவட்டத்திற்கோ கலையரசனுக்கோ கொடுக்கப்பட்டது பிழையான விடயம் அல்ல.

அது கொடுக்கப்பட்ட விதம் தான் பிழையானது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட காலத்திலிருந்து சுமந்திரன் பெண்பிரதிநிதித்துவத்திற்காக நளினியையோ அல்லது அம்பிகாவையோ போட வேண்டும் என்று சொல்லி வந்துள்ளார்.

ஒருவேளை மாவை சேனாதிராஜா வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக தேசியப்பட்டியல் சுமந்திரனின் ஆட்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

மாவை தோல்வி அடைந்ததும் மாவை சேனாதிராஜாவிற்கு தேசியப்பட்டியலை கொடுக்க வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்பதற்காகவே கலையரசனுக்கு கொடுக்கப்பட்டது.

அதாவது கலையரசன் மீதான பற்றுதலால் கொடுக்கப்பட்டது அல்ல. மாவை மீதான வெறுப்பினால் கொடுக்கப்பட்டதுதான். தலைவர் தான் கட்சி, கட்சி தான் தலைவர்.

ஆனால் இங்கே தலைமைப் பதவியை கைப்பற்றுவதற்காக எல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.

கேள்வி – முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி கோட்டபாய தனது கொள்கைப் பிரகடன உரையில் நாட்டின் இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை இதனை எப்படி நோக்குவது?

பதில் – ஒரு விடயத்தைப் பேச வேண்டுமெனில் அந்த விடயத்திற்கு ஒரு தீர்மானத்தையோ, கருத்தையோ கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கவேண்டும்.

அப்படி எந்த நோக்கமும் இல்லாத ஒருவர் அதனை பற்றி பேசாமல் விடுவது ஒரு ஆச்சரியமான விடயமல்ல. அவர் வெளிப்படையாகவே பல மேடைகளில் சொல்லிவிட்டார். ‘இங்கு இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை’ என்று.

தேர்தல் முடிந்த பின்னர் பசில் ராஜபக்ச 19ஐ நீக்குவோம், காணாமல் போனவர்கள் அரசியல் கைதிகள் தொடர்பாக பேசமாட்டோம், அரசியல் தீர்வு குறித்தும் பேசமாட்டோம், அபிவிருத்தி பற்றி மட்டும் நாம் பேசுவோம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்.

ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தலைவர் அவரே இங்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று குறிப்பிடுகிறார். பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டால்தானே அதற்கான தீர்வு குறித்தும் பேச வேண்டிவரும்.

பிறகு 13 குறித்தும் பேச வேண்டிவரும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் அதை பற்றி பேசாமல் இருப்பது தானே ஒரே வழி என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *