கிளிநொச்சியில் புதிய அம்மாச்சி உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் டக்ளஸ்
கிளிநொச்சி, இரணைமடு குளத்திற்கு அருகில் புதிய அம்மாச்சி உணவக கட்டடம் இன்று காலை 8 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும், வட மாகாண விவசாய அமைச்சின் நிதி பங்களிப்பிலும் ஐம்பத்தாறு இலட்சத்து அறுபத்தெட்டாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண விவசாய திணைக்களத்தின் மகளிர் விவசாய விரிவாக்க அலகிற்காக குறித்த கட்டடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரணைமடு குளத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட குறித்த அம்மாச்சி உணவகத்தின் ஊடாக பாரம்பரிய மற்றும் இயற்கையான உணவுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காகவும், சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்குடனும் குறித்த பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் விவசாய திணைக்களம், நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.