விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பில் பங்களாதேஷ் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து! – மனோ கணேசன் பதில்

புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் கூறியிருந்த நிலையில் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதில் வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமென், ஐநா மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு ஆதரவான தமது நாடு எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி இருக்கின்றார்.

அதற்கான உரிமை அவருக்கு உண்டு. வங்காள தேசம், நான் விரும்பி மதிக்கும் ஒரு தெற்காசிய நாடு.

வங்கதேசம் இன்று கொள்கைரீதியாக ஒரு மதசார்பற்ற நாடாக செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரி நாடாக முன்னேறுகிறது.

இங்கே விசித்திரம் என்னவென்றால், அமைச்சர் மொமென், இலங்கை தமிழர் பற்றி சொல்கின்ற சில விவரணங்கள்தான்.

சர்வதேச விசாரணையை வெளிநாட்டில் வாழும் புலிகள்தான் கோருவதாக கூறுகிறார். அடுத்தது, புலிகள் ஒரு “தமிழ் இந்து” நாட்டை உருவாக்க போராடியதாகவும் கூறுகிறார்.

“இந்து” நாட்டை உருவாக்க போராடி இருந்தால் இந்திய “இந்து'” கட்சியான, பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவை பெற்றிருப்பார்கள். அப்படி ஒன்றும்’ அன்றும் இல்லை. இன்றும் இல்லையே.

உண்மையில் புலிகள் இயக்கத்தின் மீது தமிழ் இந்து மத தலைவர்களை விட, தமிழ் கத்தோலிக்க மத தலைவர்களின் செல்வாக்கே அதிகம் இருந்தது.

குறிப்பாக போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தமிழ் கத்தோலிக்க மத தலைவர்கள் உரத்து குரல் எழுப்பினர். அதற்கு உதாரணம் இன்று நம்மை பிரிந்து விட்ட ஆயர் இராயப்பு.

இதற்காக அவர் கத்தோலிக்க மெல்கம் ரஞ்சித் பேராயருடனேயே முரண்பாட்டார். ஆகவே இலங்கையில் தமிழர் போராட்டம் தொடர்பில் எப்போதும் போல் இன்னமும் இந்த “புரிதல் சிக்கல்” விடாமல் தொடருகிறது.

Tamilwin


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *