மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிக்கிறோம்: சட்ட ஆலோசகர் க.சுகாஷ்!
மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணன் தான் என்ன பேசுகின்றேன் என்பதை அறியாமல் அல்லது அறிந்தும் அறியாமல் பல குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த காலத்தில் ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகத் தான் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரித்ததாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அவர் விடயம் தெரியாமல்தான் கதைக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாமல் கதைக்கிறாரா அல்லது உளறுகிறாரா என்பது தெரியவில்லை.
(மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்த போது வழங்கிய நேர்காணல் ஒன்றின் பகுதியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிபரப்பினார் சுகாஷ். அதில் தேர்தலை அனைத்து தமிழ் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையடிப்படையிலேயே தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார்)
தான் சார்ந்திருந்த கருத்தையே மாற்றி மக்களை மடையர்களாக்க நினைப்பது அருவருக்கத்தக்க விடயம்.
ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து விட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜபக்சக்களின் அடிவருடிகள் என்பது உண்மையிலேயே அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களின் கருத்து போலத்தான் உள்ளது.
ஈ.பி.டி.பி என்பது மத்திய அரசின் பங்காளி கட்சி. கோட்டாபய ராஜபக்சவின் அரசில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் மணிவண்ணனை ஆதரித்துள்ளார்.
மணிவண்ணனை ராஜபக்சக்கள் மேயராக்கினார்களே தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜபக்ச தரப்பின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் கட்சியல்ல. வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு தரப்பு நாங்கள்தான்.
நாங்கள் ஈ.பி.டிபிக்கு வாக்களித்தால் பிழையே தவிர, ஈ.பி.டி.பி எமக்கு வாக்களித்தால் பிழையில்லையென கூறிய மணிவண்ணன் தரப்பு, மாநகரசபையில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களிற்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களை பிரேரிக்கிறார்கள்.
ஈ.பி.டி.பியின் பி ரீமாகவும், ராஜபக்ச தரப்பின் இடது, வலது கைகளாக இருக்கும் இவர்கள், தூய்மையான எமது கட்சியை விமர்சிப்பதற்கு தகுதியில்லை.
ராஜபக்ச தரப்பின் கையாட்களாக இருந்து முதல்வர் பதவியை பிடித்த மணிவண்ணனின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.
பகிஸ்கரிப்பை கொச்சைப்படுத்துவது விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.