அரச நிர்வாகத்தை சீர்குலைக்காதீர்கள்: டக்ளஸ் தேவானந்தா விடுத்த எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அரச அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவரின் இணைப்பாளர்கள் என்ற பெயரில் மிரட்டல், அழுத்தம் கொடுக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா,? தெரியாமல் நடக்கின்றதா? என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன். அவருக்கு தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.

மாறாக, அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும்,அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன். எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிரக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள பிரயோகித்திருக்கின்றனர். எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ்.அரசாங்க அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் சிரேஸ்ட அதிகாரியான கிளிநொச்சி அரச அதிபர் தான் யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதில் அளித்துள்ளார்.

யாழ்.கிளிநொச்சி மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பிராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது.

நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு அதாவது ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்.

அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் சொல்லொணாத் துன்பங்களையும் கணக்கெடுக்க முடியாத இழப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆகவே தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப தான் முயற்சிப்பதாகவும், யதார்த்தத்தினை புரிந்து கொண்டு மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொண்டு பயனடைந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *