ஆபத்துக்கு உதவுபவர் அயல் வீட்டுக்காரர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகாரசபையின் வசம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் அதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்துசெய்ய முயற்சிக்கவில்லை.

ஏனென்றால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தமும் எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காத தன்மையும் அவ்வாறாக இருக்கின்றது.

பிரிக்கப்படாத பாரததேசத்தின் வரலாற்றிலிருந்து பார்த்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவை இலகுவில் வர்ணித்துவிட முடியாது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பை இலக்கிய இதிகாசமாகக் கூறும் இராமாயணம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலத்தில் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அதன்பின்னர் இராஜேந்திரசோழனின் பொலன்னறுவை ஆட்சிகாலம், விஜயனின் வருகை, தென்னிந்தியாகிராமங்களிலிருந்து உழைக்கும் வர்க்கத்தினரின் வருகை என இந்தியாவையும் இலங்கையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம்.

கிழக்கிந்திய கம்பனியின் (பிரித்தானியா) கட்டுப்பாட்டிலிருந்த இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த கையோடு அடுத்த ஐந்து மாதங்களில் இலங்கைக்கும் சுதந்திரம்கிடைத்தது. அதன்பின்னரே அரசியல் ரீதியான உறவு பலப்பட்டது.

இலங்கையிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் குறித்த கரிசனை இந்தியாவுக்கு என்றுமே இருந்திருக்கின்றது.

இலங்கையில் அரசியலமைப்பில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு இந்தியா செயற்பட்டதை மறுக்க முடியாது. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஒரு அம்சமாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் அதன்மூலம் உருவான 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இங்கு கூறலாம்.

இறுதியாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை முதல்முதலில் வழங்கிய நாடாகவும் இந்தியா விளங்குகின்றது.

இப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கும்போது சீனாவை தாராளமாக நாட்டிற்குள் நுழையவிட்ட அரசாங்கம், இந்தியாவை மட்டும் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டுபார்க்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரமும் அதில் அடங்குகின்றது.

இலங்கையில் எந்தவித எதிர்ப்புமின்றி தாராளமாக முதலீடுகளை மேற்கொண்டுள்ள சீனாவும் இந்த விடயத்தில் இலங்கையைக் கட்டுப்படுத்துகின்றதா? அல்லது இந்தியா ஊடாக அமெரிக்காவின் தலையீடு இதில் இருக்குமா என்ற சந்தேகம் அதற்குள்ளதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

இவை எல்லாவற்றையும்விட இலங்கையில் வாழ்ந்து வரக்கூடிய சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதால், அரசாங்கமும் பேரினவாத சிந்தனைகொண்ட சில உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தமது எதிர்ப்பை காட்டுகின்றனரா? என்றும் கேட்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் தலையீட்டால் உருவான 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபை முறைக்கும் வேறு எப்போதும் இல்லாதவாறான எதிர்ப்பை தற்போதுள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் காட்டிவருகின்றனர்.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இந்தியாவோடு ஜப்பானும்கூட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றது. இலங்கையை இணைத்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தமாகவே உள்ளது.

ஆனால், இந்த பகுதியை பிறநாட்டுக்கு வழங்கக்கூடாது என முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களே அதிகமாக காணப்படுகின்றன.

எனினும், கிழக்கு முனையம் எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கோ வழங்கப்படமாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து துறைமுகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்து சட்டப்படி வேலைசெய்து வந்த சுமார் 23 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளோ, பிரதமரின் உறுதிமொழியை எழுத்துமூல ஆவணமாக ஆரம்பத்தில் கேட்டு நின்றாலும், தற்போது ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கால பிரசாரங்களின்போது, இலங்கையின் தேசிய சொத்துக்களை எந்த நாட்டினருக்கும் வழங்கமாட்டோம் என்றும் அவ்வாறு கடந்த ஆட்சியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இரத்துசெய்வோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

ஆனால், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த வசனங்கள் எல்லாம் மறந்துவிட்டது போன்றே தெரிகின்றது.

ஏனெனில், அம்பாந்தோட்டை துறைமுகமானது சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. அதுபற்றி அவர் தற்போது வரையில் பரிசீலிக்கவில்லை.

எனினும், தான் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி கோட்டாபய கடற் பிரதேச பாதுகாப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ள சீனாவிடமே பேச்சுநடத்தி கரையோரப் பிரதேச பாதுகாப்பை தனக்குக் கீழ் கொண்டுவருமளவுக்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியால் ஏன் கிழக்கு முனைய ஒப்பந்தத்தை மேற்கொள்ளமுடியாது?

எந்தப் போராட்டங்களும் நடக்குமளவிற்கு எனது ஆட்சி இருக்காது என்று கூறியிருந்த ஜனாதிபதிக்கு கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக ஊழியர்களின் போராட்டத்தை ஏன் ஒரேநாளில் நிறுத்த முடியவில்லை?

அப்படியானால் அரசாங்கத்தால் இந்த ஒப்பந்தத்திற்கு நேரடியாக எதிர்ப்பைக்காட்ட முடியாமல் அதை போராட்ட வடிவில் இந்தியாவுக்கு உணர்த்தவா இந்த சம்பவங்கள்?

கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இம் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான 49 சதவீத பங்குகளை முதலீடு செய்வதற்கும் பிரதான பங்காளரான இலங்கை 51 சதவீதத்தையும் கொண்டிருப்பதற்கான ஒப்பந்தமே மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இதற்கு முன்பதாக தெற்கு துறைமுகமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியோடு அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று 6 வருடங்களுக்கு முன்பு சீன நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டது.

அரசதனியார் கூட்டு முயற்சி என்று கூறப்பட்டாலும் கூட, குறித்தஒப்பந்தத்தின்படி 15 பங்குகளே இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமாக இருக்க, மீதி 85 வீதமான பங்குகள் சீன நிறுவனத்துக்குரியதாகவுள்ளது.

இதுகுறித்து, அந்நேரம் எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை. ஆனால் தற்போது கிழக்கு முனையத்தின் 51 பங்குகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க மிகுதியான 49 பங்குகளை இந்தியாவும் ஜப்பானும் கொண்டிருக்கும்போது கோசங்கள் எழுகின்றன.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் ஜப்பானும் பிரதானமானது. அபிவிருத்தியடைந்த ஜப்பானானது இலாப நோக்கத்துக்காக இதில் பங்கிடவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகும் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு சென்று வந்ததன் பிறகும், ஜனவரி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப் பிறகும் இந்த கோசங்கள் சற்று அதிகமாகியுள்ளன.

இந்தியாவின் தலையீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என கடும் போக்கு கருத்துக்களின் சொந்தக்காரரான அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.

மறுபக்கம் இந்திய நிறுவனங்களுக்கு தேசிய சொத்துக்களை விற்கவோ குத்தகைக்கோ வழங்கக்கூடாது என பேரினவாத கோசம் எழுகின்றது.

அவசரத்துக்கு உதவக்கூடியவர் அயல் வீட்டுக்காரரே என்ற விடயத்தைக்கூட அறியாமல் இலங்கை செயற்படுவதுபோன்று உள்ளது. அதேநேரம் அயல் வீட்டுக்காரருடன் பகைத்துக்கொண்டாலும் நிம்மதி பறிபோய்விடும் என்ற யதார்த்தத்தையும் இலங்கை உணரவேண்டும்.

அப்படி நிம்மதி பறிபோய்விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே தற்போது மேற்முனைய அபிவிருத்தியில் இந்தியாவுடன் கூட்டு என்று அறிவித்துள்ள அரசாங்கம், கிழக்குமுனைய விடயத்தில் அமைச்சரவை தீர்மானங்களை முன்வைத்து, அதை இராஜதந்திர ரீதியில் அணுகி சுமுகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

– Virakesari


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *