ஜனாஸா எரிப்பு விவகாரம்! சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள இலங்கை

கோவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கான தனது முடிவை மாற்ற இலங்கை அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் ஆரம்பிக்கவுள்ள சில நாட்களுக்கு முன்னதாக இந்த விவகாரம் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“கோவிட் -19 பல உயிர்களை காவுகொண்டுள்ளது. சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்க இடமளிக்குமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விடைகொடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர தகவல்களின்படி, இந்த அறிவிப்பு பெப்ரவரி மாதம் நடைபெறும் ஜெனீவா கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எடுத்துக் கொள்ளவிருக்கும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா எடைபோட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய அமெரிக்க ஐ.நா உறுப்பு நாடாக இல்லை. எனினும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கா மீண்டும் ஐ.நாவில் இணையும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன், வாஷிங்டனில் உள்ள இலங்கையின் தூதர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் புதைக்கப்பட்ட உடல்கள் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்று இலங்கை சுகாதார அதிகாரிகள் கூறினாலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்கள் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் பரிந்துரைத்துள்ளன.

குறிப்பாக, பாரம்பரிய அடக்கங்களுக்குப் பதிலாக தகனம் செய்வது கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று WHO கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமை வல்லுநர்கள், கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் உடல்களைக் கையாள்வதற்கான ஒரே வழி தகனம் செய்வதை மனித உரிமை மீறல் என்று எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், கோவிட் -19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்துமாறு ஐ.நா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது” என தெரிவித்துள்ளார.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *