யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைப்பு
கடற்றொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் வீடு சேதம் அடைந்த கடற்றொழிலாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் வேலைத்திட்டத்தின் யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபா காசோலை வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் அவர்களுடைய வீடு திருத்த பணிக்காக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இந்த அரசாங்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு வீட்டுத்திட்டம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த வீட்டுத்திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை முன்னிலைப்படுத்தி வீட்டுத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
எனவே அவ்வாறான நிலையில் உள்ளோர் தமது பதிவுகளை தமது பிரதேச செயலகங்களில் மேற்கொள்வதன் மூலம் அந்த வீட்டு திட்டத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.