யாழ்.சிறுவனின் கோரிக்கை! உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை இன்று குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மகிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்றய தினம் பார்வையிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, ராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் பயணம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனும் இதன்போது உடநிருந்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *