யாழில் அங்கஜனின் கூட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு, டக்ளஸ், விக்கி, விஐயகலா

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

எனினும் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஐயகலா மகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.

மேலும் முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. எனினும் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *