விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பிய டெனீஸ்வரனின் வழக்கு! தீர்ப்பு பிழை என்கிறார் அவர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுநருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேல் நீதிமன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை. அதில் ஒரு விடயத்தை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் எடுக்காது விட்டு விட்டனர்.

நான் அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் போது அவருக்கு ஒரு விடயத்தை கடிதத்தில் எழுதியிருந்தேன். உங்களுக்கான உத்தியோகபூர்வமான கடிதம் வெகு விரைவில் கிடைக்கும் என தெரிவித்திருந்தேன். ஆளுநருக்கும் அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆளுநர் அதனை அனுப்புவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுநர் அதனை அனுப்பவில்லை. ஆகவே இதில் பிழை ஆளுநருடையது.

ஒருவரை நாம் அமைச்சராக நியமிக்கும் போது இவர்களுக்கு இன்ன இன்ன அமைச்சுக்கள் எனத் தெரிவித்து அதற்கான உறுதிமொழிகளை வழங்குமாறு ஆளுநரிடம் கேட்கின்றோம்.

நாங்கள் எழுதிய அந்தக் கடிதத்தை வைத்து அவர்களை அழைத்து அவர்களிடம் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து அவர்களுக்கான அமைச்சுக்களை வழங்குகின்றார்.

அதன்போது நாங்கள் கோரியதைத் தான் அவர் செய்கின்றார். அது தான் சட்டம். அதுபோல் நான் நீக்குவதாக கூறியவருக்கும் வர்த்தமானி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவே அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்த பின்னரே மற்றவருக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் டெனீஸ்வரனை நீக்காது அவருக்கு பதிலாக நியமித்தவர்களுக்கு ஆளுநர் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து அவர்களை அமைச்சர்களாக அறிவித்துள்ளார். இது தான் பிழை.

இந்த விடயத்தை நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதனையே பிழை என்கின்றேன். எனவே இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *