யாழில் 11 கோடி மோசடியில் சிக்கிய முகாமையாளர் உட்பட மூவரின் நிலை

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு 11 கோடி ரூபாய் முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில், அந்நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிணை மனுவை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை வரும் 24ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபாய் பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டது.

அதனை நிதி நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து தங்க நகை அடகு மீதான முற்பணம் என கணக்குக் காட்டியுள்ளனர்.

எனினும் நிதி நிறுவனத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கு உரிய நகைகள் அடகுப் பிரிவிடம் இருக்கவில்லை.

அதுதொடர்பாக கணக்காய்வுப் பிரிவால், நிதி நிறுவன முகாமைத்துவத்துக்கு அறிக்கையிடப்பட்டது.

சுமார் 6 மாதங்கள் இந்தப் பணம் தனிநபர் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் பெறப்படாமல் மோசடியாக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுதொடர்பாக உரிய பணம் மற்றும் வட்டி அடங்கலாக சுமார் 11 கோடி ரூபாய் பணத்தை வர்த்தகரிடமிருந்து மீள அறவீடு செய்யுமாறு யாழ்ப்பாணக் கிளை முகாமையாளருக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

எனினும் உரிய காலத்துக்குள் பணம் மற்றும் வட்டியை மீள அறவீடு செய்வதற்கு கிளை முகாமையாளர் தவறிவிட்டதால், அவருக்கு எதிராக கொழும்பு பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் முறைப்பாடு வழங்கியது.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவு, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளரைக் கைது செய்தது.

முகாமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை முற்படுத்தினர்.

மேலும் அடகுப் பிரிவில் பணியாற்றிய ஆண் உத்தியோகத்தர் ஒருவரும் பெண் உத்தியோகத்தர்கள் இருவரும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெண் உத்தியோகத்தர்கள் இருவருக்கு பிணை வழங்கிய நீதிமன்று ஆண் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைத்தது.

அத்துடன், பணத்தை மோசடியாகப் பெற்று அதனை அறவீடு செய்யாமல் தலைமறைவாகியிருந்த மாதகலைச் சேர்ந்த வர்த்தகரும் பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதன்போது சந்தேகநபர்களால் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில், மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதனாலும் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டி உள்ளதாலும் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க பெரும் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதனால் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், குறித்த மூவரினதும் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *