“வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது தாக்குதல்”

சனசமூக நிலைய செயலாளரும் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரை மதுபோதையிலிருந்த நபரொருவர் தாக்கி காயமடைய செய்துள்ளார்.

வவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சனசமூக நிலைய செயலாளரும், கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான புனிதலோஜினி மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அவரைக்காப்பாற்றச் சென்ற ஆண் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா ஆசிகுளம் பகுதியில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் பொது நோக்கு மண்டபத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவரை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு பல்வேறு பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.

அப்போது அந்நபருக்கு நெருங்கியவர் மதுபோதையில் அங்கு சென்ற கட்சியின் ஆதரவாளர் ரஞ்சித்குமார் என்பவரே தாக்குதல் நடாத்தியதுடன் அங்குள்ள பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.

இதன்போது மாதர் சங்கம் மற்றும் சமுர்த்திச்சங்க உறுப்பினர்களான பெண்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய நபர் அங்கிருந்து தொலைபேசியில் பொலிஸாருடன் தொடர்புகொண்டுள்ளதுடன் அதன் பின்னர் மக்களிடம் எனக்கு இருக்கும் பணத்திற்கும் எனக்கு இருக்கும் பொலிஸ், அரசியல் செல்வாக்கிற்கும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்கள் அனைவரையும் வீடு புகுந்து வெட்டுவேன் என்று எச்சரித்துவிட்டு சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கே சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் அவரை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இன்று காலை இவ்வாறு தாக்குதல் நடத்திய நபர், தன்னையும் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சென்று அனுமதியாகியுள்ளார்.

காயமடைந்த பெண்ணுக்கு விபத்துப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் பக்கச்சார்பின்றி நடாத்தி வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *