சுயமாக முன்னேற எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்தது! விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போன்றே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் நடாத்தியதாக வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமாக புதிய வாழ்வு நிறுவனம் வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் குறித்த தொழில் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முன்னாள் முதல்வர் தெரிவிக்கையில்,

முப்பது வருடமாக எமது நாட்டில் இடம்பெற்ற தொடர் யுத்தம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களிற்கு முகம்கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசின் ஊடாகவும், வெளிநாடுகளின் உதவிகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பல முறை பேசியே வந்திருக்கின்றேன்.

ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போன்றே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் நடாத்தியதாக அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இதேவேளை சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *